எத்தனையோ ப்ரச்னைகளை சரி செய்து இறுதியாய் விமானத்தினுள் அமர்ந்த பின் தான் ஆசுவாசமாய் உணர்ந்தான்.
அவளிடம் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன் என்று நெட் போனில் சொல்லும் போது பரவசமாய் இருந்தது. ஏதேதோ காரணங்கள் சொல்லி கடந்த ஐந்தரை ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப் போட்டு அவனுக்காக காத்திருக்கும் அவள் முகத்தை நாளை இந்நேரம் நேரில் தரிசித்திருப்பான். அவளை பார்க்கும் அந்த தருணம் இதை விட அதிக பரவசமாய் தான் இருக்கும்.
விமானம் புறப்பட இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. அது வரை இணைய இணைப்பு கிடைக்கும். ஏதாவது யூ-ட்யூப் ல் பார்க்கலாம் என அதனை தொட்டான். பாப் அப் ல் "மீனராசி நேயர்களுக்கான குருப் பெயர்ச்சி பலன்" முதலில் துள்ளி வந்தது.
அவனுக்கான ராசி அது என்பதை எப்படி அறிந்து அவன் கண்ணில் படும் படி செய்கிறார்கள் என்பதையெல்லாம் கற்பனை செய்யாமல் கேட்க தொடங்கினான். குரு எப்போது எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு மாறுகிறார், எந்த வீட்டிலிருந்து எந்த வீட்டை பார்ப்பார் என்ற முகவுரைகளை கேட்கும் போதே கண்கள் தூக்கத்திற்காக ஏங்கின. மீனராசி நேயர்களுக்கு வெளிநாட்டு பயண யோக வாய்ப்பு 80% சதவீதம் உள்ளது எனும் போது ஆழ்ந்து தூங்கியிருந்தான்.
தொடந்து ஐந்தரை வருடங்களை அரபு தேசத்தில் கழித்தவனுக்கு வெளிநாட்டு பயணம் என்பது தாய்நாடு செல்வதாக கூட இருக்கலாமோ.