அநேகமாய் அந்த கதையை ஆனந்த விகடனில் தான் வாசித்திருப்பேன்.அந்த கதைக்கு ஆசிரியர் வைத்திருந்த பெயர் "நீள் சதுர நிலவு".ஆனால் எனக்குள் என்னவோ அது "செவ்வக நிலவு" என இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.
வானில் தோன்றும் நிலவு பிறை வடிவிலோ அல்லது அரை முக்கால் அல்லது முழு வட்டமாகவோ தான் தோன்றும். இதென்ன செவ்வக நிலவு?
முந்தைய காலங்களில் இரவானவுடன் உறக்கம் வரும் வரை வீட்டின் வெளியில்,திண்ணைகளில், மாடி வீட்டில் இருப்பவர்கள் மொட்டை மாடிகளில் அமர்ந்து கதைபேசி விளையாடி களிப்பது வாடிக்கை அப்போது வட்ட நிலவையும் கண்டு களிப்போம்.
ஆனால் இன்று? இரவானால் எத்தனை பேர் நிலவை ரசிக்கிறோம்.அடுக்ககங்கள் நிறைந்த நகரில் வசிப்பவர்களை விட்டு தள்ளுங்கள்.கிராமங்களில் வசிப்பவர்கள் கூட நிலவை ரசிப்பதாக தோன்றவில்லை.உணவருந்தி விட்டு திண்ணைகளில் உறங்கி எழுந்த வயதானவர்கள் கூட வெளியில் வருவதில்லை. அவர்களும் என்ன செய்வார்கள்?.திண்ணை வைத்து யாருமே வீடு கட்டாத நிலையில் அவர்கள் மட்டும் எங்கு அமர்ந்து பழங்கதை பேசி ஞாபங்களை புதுப்பிப்பார்கள்?.
ஊதாங் குழலால் மூட்டி மூட்டி விறகடுப்பில் சமைத்தவர்கள் சடுதியில் எரிவாயு அடுப்பில் சமைத்து விடுகிறார்கள். இந்த மாற்றதினால் சேமிக்கப்பட்ட நேரம் எங்கே? வாய்க்காலுக்கோ,கிணற்றுக்கோ சென்று துவைத்து குளித்து வீட்டிற்கு தேவைப்படும் நீரையும் எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை.தெருக்கோடியில் தண்ணீர் குழாய்.அல்லது வீட்டில் தண்ணீர் குழாய்.அறைக்கு அறை தண்ணீர் குழாய். இதிலெல்லாம் சேமித்த நேரம் எங்கே?.
இப்படி சேமித்த நேரத்தினை திருடுவது பெரும்பாலும் "செவ்வக நிலவு".இரவானல் கண்டு ரசித்த நிலவை இடம் மாற்றி வைத்த தொலைக்காட்சி பெட்டியை "செவ்வக நிலவு" என அழைப்பது பொருத்தமாக இருக்கும் தானே?.
நான் வாசித்த அந்த "நீள் சதுர நிலவு" கதைக்காலம் குடும்ப அட்டைக்கு ஒரு இலவச தொலைக்காட்சி பெட்டி வருவதற்கு முந்தைய பஞ்சாயத்து டிவி காலம்.அந்த கதையில் வரும் ஊரில் பஞ்சாயத்து டிவி பழுதாகி விடுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட ஒருத்தி "டிவியை சரி செய்ய யாரும் முன் வரவில்லையே. செலவாகும் பணத்தை பெண்கள் திரட்டி தருகிறோம். ஆண்கள் யாரவது வல்லுநரை அழைத்து வந்து சரி பண்ண முடியுமா என சவால் விடுவாள்.உசுப்பேறிய ஒருவன் சவாலில் வெல்வான்.
அன்றிரவு தொலைக்காட்சியின் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஊரே லயித்துக் கிடக்கும். அவளும் அவனும் அவர்களோடு இல்லை என்பதை மறந்து.
அவளும் அவனும் ஒளிந்து கிடப்பார்கள் வெண்ணிலவின் மென்னொளியில் மறைந்து.
No comments:
Post a Comment