twitter

Thursday, 12 May 2016

செவ்வக நிலவு

             
                         








      
























       அநேகமாய் அந்த கதையை ஆனந்த விகடனில் தான் வாசித்திருப்பேன்.அந்த கதைக்கு ஆசிரியர் வைத்திருந்த பெயர் "நீள் சதுர நிலவு".ஆனால் எனக்குள் என்னவோ அது "செவ்வக நிலவு" என இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.
                          வானில் தோன்றும் நிலவு பிறை வடிவிலோ அல்லது அரை முக்கால் அல்லது முழு வட்டமாகவோ தான் தோன்றும். இதென்ன செவ்வக நிலவு?  
                           முந்தைய காலங்களில் இரவானவுடன் உறக்கம் வரும் வரை வீட்டின் வெளியில்,திண்ணைகளில், மாடி வீட்டில் இருப்பவர்கள் மொட்டை மாடிகளில் அமர்ந்து கதைபேசி விளையாடி களிப்பது வாடிக்கை அப்போது வட்ட நிலவையும் கண்டு களிப்போம். 

        ஆனால் இன்று? இரவானால் எத்தனை பேர் நிலவை ரசிக்கிறோம்.அடுக்ககங்கள் நிறைந்த நகரில் வசிப்பவர்களை விட்டு தள்ளுங்கள்.கிராமங்களில் வசிப்பவர்கள் கூட நிலவை ரசிப்பதாக தோன்றவில்லை.உணவருந்தி விட்டு திண்ணைகளில் உறங்கி எழுந்த வயதானவர்கள் கூட வெளியில் வருவதில்லை. அவர்களும் என்ன செய்வார்கள்?.திண்ணை வைத்து யாருமே வீடு கட்டாத நிலையில் அவர்கள் மட்டும் எங்கு அமர்ந்து பழங்கதை பேசி ஞாபங்களை புதுப்பிப்பார்கள்?. 
                          ஊதாங் குழலால் மூட்டி மூட்டி விறகடுப்பில் சமைத்தவர்கள் சடுதியில் எரிவாயு அடுப்பில் சமைத்து விடுகிறார்கள். இந்த மாற்றதினால் சேமிக்கப்பட்ட நேரம் எங்கே? வாய்க்காலுக்கோ,கிணற்றுக்கோ சென்று துவைத்து குளித்து வீட்டிற்கு தேவைப்படும் நீரையும் எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை.தெருக்கோடியில் தண்ணீர் குழாய்.அல்லது வீட்டில் தண்ணீர் குழாய்.அறைக்கு அறை தண்ணீர் குழாய். இதிலெல்லாம் சேமித்த நேரம் எங்கே?.
                             இப்படி சேமித்த நேரத்தினை திருடுவது பெரும்பாலும்  "செவ்வக நிலவு".இரவானல் கண்டு ரசித்த நிலவை இடம் மாற்றி வைத்த தொலைக்காட்சி பெட்டியை "செவ்வக நிலவு" என அழைப்பது பொருத்தமாக இருக்கும் தானே?.
                            நான் வாசித்த அந்த "நீள் சதுர நிலவு" கதைக்காலம் குடும்ப அட்டைக்கு ஒரு இலவச தொலைக்காட்சி பெட்டி வருவதற்கு முந்தைய பஞ்சாயத்து டிவி காலம்.அந்த கதையில் வரும் ஊரில் பஞ்சாயத்து டிவி பழுதாகி விடுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட ஒருத்தி "டிவியை சரி செய்ய யாரும் முன் வரவில்லையே. செலவாகும் பணத்தை பெண்கள் திரட்டி தருகிறோம். ஆண்கள் யாரவது வல்லுநரை அழைத்து வந்து சரி பண்ண முடியுமா என சவால் விடுவாள்.உசுப்பேறிய ஒருவன் சவாலில் வெல்வான்.
                            அன்றிரவு தொலைக்காட்சியின் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஊரே லயித்துக் கிடக்கும். அவளும் அவனும் அவர்களோடு இல்லை என்பதை மறந்து.
                            அவளும் அவனும் ஒளிந்து கிடப்பார்கள் வெண்ணிலவின் மென்னொளியில் மறைந்து.

      

Monday, 21 March 2016

தந்துகி: நாய்தன் மற்றும் மனிநாய் - ஆதவன் தீட்சண்யா

தந்துகி: நாய்தன் மற்றும் மனிநாய் - ஆதவன் தீட்சண்யா: எதிரியையும் எல்லையையும் இன்னும் உருவாக்கிக் கொண்டிராத போதிலும் என்றாவதொரு நாள் கடல் முனியும், வனபூதமும் பறந்து வந்து  தாங்கள் வாழும் நிலப்பரப்பை விழுங்கிவிடக்கூடும் என்கிற தீராத அச்சத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் எல்லை என்பதறியாமலேயே கடலுக்கும் வனத்துக்கும் இடைப்பட்ட தமது வாழிடத்தைக் காவல் செய்துவருகின்றனர்

Tuesday, 8 December 2015

மழை

மறைந்திருந்த
மனிதத்தை
வெளுத்து வாங்கி 
துவைத்து
தந்திருக்கிறேன்.
சாகடிக்க
நினைக்காதீர்கள்.
நினைத்தால்!!!
வருவேன்
மறுபடியும்.
‪#‎மழை‬

Thursday, 27 August 2015

சதுரங்கன்

திரைப்படங்களில் ஒருவரையொருவர் நக்கல் நையாண்டி கேலி கிண்டல் செய்து புகழ்பெற்றவர்கள் கவுண்டமணி - செந்தில்.
 அதே போன்ற இரு பாத்திரங்களுக்கான பெயர்களை கற்பனைத்திருக்கிறேன்.
ஒருவர் "ரானா" .
இவர் வயதில் பெரியவர்.எங்கூர் பக்கம்  "ர" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயருடையவர்களை அப்படி அழைப்பது வழக்கம்.
 மற்றொருவன் சதுரங்கன்.
 வயதில் சிறியவன். குறுக்குமறுக்காய் கேட்பான்.இடக்குமடக்காய் பதிலளிப்பான்.
அவர்களின் முதல் உரையாடல் இதோ
ரானா:
எலேய்!  "சதுரங்கன்" னு ஒனக்கு நீயே பேரு வச்சிருக்கியாமுல்ல? அதென்னடே சதுரங்கன்?
சதுரங்கன் :
"ஸ்ரீரங்கன்" ன்னு பேரு இருக்கும் போது "சதுரங்கன்" னு இருக்கக் கூடாதா?.நம்மூர்ல ஆடுபுலிஆட்டம் வெளயாடுறா மா(தி)ரி படிச்சவுங்க வெளயாடுற ஒரு வெளயாட்டு செஸ்.நீரு செக்ஸ் ன்னு நெனச்சுராதேரும்.ஏஞ்சொல்லுதேம்னா இருவத்து நாலு மணி நேரமும் ஒம்ம நெனப்பு அப்பிடி.அந்த செஸ் வெளயாட்ட தமிழ்ல "சதுரங்கம்" ன்னு சொல்லுவாங்க.ரொம்ப விறுவிறுப்பான வெளயாட்டாம்.அதே மா(தி)ரி எப்பவும் விறுவிறுப்பா இருக்கணும் னு  நெனச்சுக்கிட்டு எனக்கு நானே வச்சுகிட்ட பேரு.
ரானா:
அதாவது  "எந்திரம்" ங்கறத மாத்தி "எந்திரன்" ன்னு வச்சா மா(தி)ரி ன்னு சொல்லுத.
சதுரங்கன் :
ஆமா.பெருசுன்னா பெருசு தான்.கப்பு ன்னு புடிச்சிக்கிட்டேரே. சரி சரி புதுசா பேரெல்லாம் வச்சிருக்கேன். "நால்லா இரு" ன்னு ஆசிர்வாதம் பண்ணுமுய்யா.
ரானா :
ஆசிர்வாதம் பண்ணுவேன் ஆனா துட்டு கேக்கக்கூடாது சரியா.

Friday, 5 June 2015

நொந்த நூடுல்ஸ்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் 
மெய்வருத்தக் கூலி தரும்
என்றார் திருவள்ளுவர்.அதே போல் ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது நாளடைவில் அது உண்மையாகி விடும். அதை நிரூபிப்பது போல் நடந்துள்ள ஒரு சம்பவம் தான் இது.
 முன்பெல்லாம் பிரச்னைகளில் சிக்கி தவிப்பவர்கள்
                                 "நொந்து நூலாகி போனேன்" 

என்று புலம்புவார்கள். பின்பு புதுமையாய் சிந்தித்தவர்கள் அதே வார்த்தையை தரம் உயர்த்துவதாய் நினைத்து
 "நொந்து நூடுல்ஸ் ஆனேன்"
என்று கூறத் துவங்கினார்கள். தற்போது அந்த வார்த்தை எந்தளவிற்கு உண்மையாகி இருக்கிறது  என்பதற்கு சிறந்த உதாரணம் அதனை (நூடுல்ஸ்) தயாரித்த நிறுவனம் படும் பாடு.
அதற்கான காரணம் நமது உலகம் சுற்றும் பிரதமர் சீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு அங்கே மூன்று வேளையும் உணவாக நூடுல்ஸையே விருந்தளித்தார்களாம். அதில் கடுப்பானவர்கள் எடுத்த நடவடிக்கை தான் தற்போதைய நூடுல்ஸ் படும் பாடு என ஒருவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.அந்த காரணம் உண்மையாயில்லாமல் இருக்கலாம். ஆனால் வெந்து நூடுல்ஸ் ஆக வேண்டிய ஒன்றை "நொந்து நூடுல்ஸ்" ஆகி என்று சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லியே நொந்து போக வைத்த பெருமை அதனை சொன்ன அனைவரையும் சார்ந்தது.

வேண்டுகோள் : 
இதனை படித்து நொந்து நூலாகி போனவர்கள் என்ன சாபம் வேண்டுமானாலும் இடுங்கள் "நொந்து நூடுல்ஸ்" ஆவாய் என்பதனை தவிர்த்து.

Thursday, 11 December 2014

டச் ஸ்கின்

டச் ஸ்கிரீன் கேள்விப் பட்டிருப்பீர்கள்

அதென்ன டச் ஸ்கின்?.

"டச் ஸ்கின்" என்பது  "டச் ஸ்கிரீன்" என்பதை எழுதும் போது ஏற்பட்ட எழுத்துப்பிழை என நினைக்காதீர்கள்.

புதிதாய் வந்துள்ள தொழில்நுட்பம்.
மொழிபெயர்ப்பு மட்டும் எனது மதி நுட்பம்.

டச் ஸ்க்ரீன் என்னும் தொடு திரை போன்,டேப்களைப் போல் டச் ஸ்கின் என்னும் தொடு தோல் போன்கள் வந்துள்ளன.

அப்டின்னா?


              கை சங்கிலி போன்ற ஒன்றை கையில் அணிந்து கொண்டு (கை சங்கிலின்னா கையில அணிவது தானேன்னு கேக்கப்பிடாது) கையை ஒரு திருப்பு திருப்பினால் அதிலிருந்து ஒளி நம் கையில் விரிகிறது. காண்பதற்கு சினிமா புரொஜெக்டரிலிருந்து வெளிவரும் ஒளியைப் போல் சிறிய அளவில் காணப்படுகிறது. திரையாக நம் கை.
               வெளி வரும் ஒளியிலிருந்து பட்டன்களும்,முத்திரைகளும்(LOGOS) நம் கையில் விரிகின்றன. மற்றொரு கையின் விரல் கொண்டு பட்டன்களை தொட்டால் டச் ஸ்கிரீன் மொபைல் போன்களைப் போல்  தன் வேலையை செய்யத் தொடங்கி விடுகிறது.
"ராத்திரி சரக்கடிச்சுட்டு தமிழ் பேசும் ஆங்கில படம் பா(ர்)த்து விட்டு அப்புறமா வந்த கனவை கண்டு இப்படி எழுதியிருக்கிறேன்"
 என நீங்கள் நினைத்தால் நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
"அப்போ சரியா எப்படி நினைக்க வேண்டும்" என்றால் எழுதியுள்ள அத்தனையும் Youtube ல் கண்டது.
எப்படி என்பது

ரு
சி
றி
ய 
இடைவேளைக்கு பின்பு

மூல ஆதாரம் :http://www.cicret.com/wordpress/?page_id=17920



Youtube (தமிழ் மொழி பெயர்ப்பு தப்பான அர்த்தம் தருகிறது)ஆதாரம்:

துப்பு :Sureshpanel Sp
https://www.facebook.com/groups/304559716412549

Thursday, 31 July 2014

என்னங்க! ஏதாவது சொல்லிட்டு போங்க

30 - ஜுலை - 14 அன்று சென்னை ஹலோ எப்எம் http://hello.fm/liveStream1.aspx கேட்டுக் கொண்டிருந்தேன்.அதில் மத்திய அரசு பணிகளுக்காக யுபிஎஸ்சி(UPSC) ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் பூர்வாங்க தேர்வு (Preliminary Exam) கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதை பற்றி நேயர்களிடம் கருத்து கேட்டு நேரடி ஒலிபரப்பு செய்தார்கள்.
          அதில் ஒருவர், மத்திய அரசு பணியானது தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் ஆற்றவேண்டிய ஒன்று.எனவே பிற மாநிலங்களில் சென்று பணியாற்ற ஆங்கிலம் அத்தியாவசியமானது என்றார்.
          இன்னொரு பெண்மணி,தனது மகள் மத்திய அரசு பணிகளுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகவும்,அவள் மற்றும் அவளைப் போன்று அத்தேர்வு எழுத முனைபவர்கள் ஆங்கில வழி கல்வியே பயின்று வருவதால் ஆங்கிலத்தினாலான தேர்வுகள் சரிதான் என்றார்.
           இதைக் கேட்ட போது எனக்கும் அவர்களிருவரும் சொல்வது சரியென்றே தோன்றியது.ஆனால் இன்னொருவர் சொன்ன கருத்து அந்த எண்ணத்தை மாற்றியது.
          முதலில் அவர் அவரை அறிமுகப்படுத்தும் போது இது போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றில் சில வருடங்கள் பணியாற்றியதாக தெரிவித்துக்கொண்டார்.
           அடுத்து அவர் அது போன்ற தேர்வுகள் பற்றிய விபரங்களைச் சொன்னார்.அத்தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதித்தறிய தனித்தேர்வு இருப்பதாக தெரிவித்தார்.
              மேலும் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதனால் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் வினாவை தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இந்தி தாய்மொழியாக இல்லாத ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது.எனவே இந்தி தெரிந்தவருக்கு வழங்கப்படும் அந்த வாய்ப்பு இந்தி தெரியாத அனைவருக்கும் மறுக்கப் படுகிறது.எனவே அந்த வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப் பட அவரவர் தாய்மொழியிலும் வினாத்தாள் இருக்க வேண்டியது அவசியமே என்றார்.எனக்கும் அவர் கூற்று சரியென்றே பட்டது.
            நிறைவாக தொகுப்பாளர், மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு பணிபுரிய வந்து தமிழைக் கற்றுக்கொள்வது போல் நாமும்(தமிழர்கள்) மற்ற மாநிலங்களுக்கு சென்று அம்மாநில மொழியை கற்றுக் கொள்வதில் சிரமம் இருக்காது என்றார்.
          இந்திய மக்கள் தொகையில் 1% மக்கள் கூட பேசாத (In the 2001 census of India, 14,135 people reported Sanskrit as their native language-WIKI) சமஸ்கிருதத்திற்கு வாரம் கொண்டாடும் ஆட்சியாளர்கள் மற்ற மொழிகளுக்கு மதிப்பளிக்க தவறுவதன் மூலம் ஒன்று பட்ட இந்தியாவை உடைபட்ட இந்தியாவாக மாற்றாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
பின்னூட்டம் மூலம் உங்கள் கருத்துகளுக்கு சாகாவரம் அளியுங்கள்.