twitter

Friday, 15 September 2017

"ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்"

ஏதோ அரவம் கேட்கவே கண் விழித்தான்.
"ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்"
என்ற வாசகம் அடங்கிய படத்தினை நேற்று ஷேர் செய்ததினால் இன்று பணப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கி வைக்கிறார்களோ என்ற ஓவா(ர்) ஆசையில் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.வெளிப்பக்கமாய் பூட்டியிருந்த கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் திரு டன்.
       "வெளிப்பக்கமாய் பூட்டியிருக்கும் வீட்டின் வெளியில் ஒருவன் சரி. ஆனால் வீட்டிற்கு உள்ளே ஒருவன் எப்படி?  யுவர் ஆனர்"
என சிந்தனை உதிப்பவர்களுக்காக
(இரண்டு மாத வாடகை பாக்கி வைத்திருக்கும் வாலிபன்  வீட்டு முதலாளியிடம் இருந்து தப்பிப்பதற்காக கதவை வெளிப்பக்கம்  பூட்டால் பூட்டி விட்டு சன்னல் வழியாக  ஏறி குதித்து உள்ளே  வருவான் என தெரிவிக்கப் படுகிறது.)
கதவை திறக்க முயன்று கொண்டிருப்பது வீட்டு முதலாளி இல்லை என்ற உடனேயே ஒரு தைரியம் வந்து சத்தமின்றி சன்னல் வழியாக குதித்து திரு டனை பின்பக்கமாக இறுக்கி பிடித்து "ஐயோ திருடன் ஐயோ திருடன் " என சத்தமாய் கத்த அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்தனர். ஆளாளுக்கு பேசி கடைசியில் அவசர போலீஸ் க்கு போன் செய்ய ரோந்து பணி போலீசார் வருவார்கள் என்றார்கள்.  வரும் போலீசார்கள் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசன் வந்து வாக்குமூலம் கொடுக்கச் சொல்வார்கள் என்பதனால் தாமதமான போலீசாரின் வருகையை காரணம் சொல்லி அனைவரும் கலைந்து சென்றனர்.
இப்போது திரு டனும் இவனும் மட்டும். மௌனமாய் பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தது. போலீஸ் வரும்வரை ஏதாவது திருடனிடம் பேசுவோம் என நினைத்து,
யோவ் ! திருடுறதுக்கு ஏம்ய்யா என் வீட்டை தேர்ந்தெடுத்த(ாய்) ? என்றான்.
"அதா பாஸ். நேத்து  "ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்" ங்கற படத்தை  உங்க பேஸ்புக் பேஜ் ல நீங்க ஷேர் பண்ணிருந்தீங்க. அதான் குவிஞ்சுருக்கற பணத்துல கொஞ்சத்தை எடுக்கலாம் ன்னு உங்க வீட்டை தேர்ந்தெடுத்தேன் என்றான்.

Friday, 1 September 2017

மரண சிகிச்சை

மானம் கெட்ட எங்களோடு
வாழப் பிடிக்காமல் மரித்து
விட்டாயா ? மகளே

வைத்தியம் படிக்க அங்கீகாரம்
தரவில்லையென்றதற்காக
அதிர்ச்சி வைத்தியம்
அளித்து விட்டாயே அனிதா

மரணித்த பின் , உனைச் சந்திக்க நேர்ந்தால்
மன்னித்து ஏற்காமல்
மானத்தை அங்காவது கற்றுக் கொடு.
நீ அளித்த மரணசிகிச்சையின் மகிமை
அப்போதாவது புரியட்டும் எங்களுக்கு.

Tuesday, 29 August 2017

கல்லும் கடவுளும்




நாத்திகம் பேசிய அகராதி சிற்பியை
அவமதிக்க நினைத்து,
"அம்மி கொத்துவீர்களா" என்றேன்.

"அதனாலென்ன
அதுவும் தொழிலில் ஒரு வகை தானே"
எனக் கொத்தித் தந்தான்
ஆண்டவன் உருவத்தை.
                                         
நேற்றுவரை இருந்த கல் தானே
என அரைக்கவும் முடியாமல்
இன்றெனக்கு கிடைத்த கடவுள்
என வணங்கவும் முடியாமல்
நான்

Monday, 17 July 2017

பம்பரம்

பல்சர், லேப்டாப், செல்பேசி
இவையெவையும்
வழங்கியதே இல்லை
நான் முதன்முதலில்
வாங்கிய பம்பரம் தந்த
பரவசத்தை.

Wednesday, 18 January 2017

உறவன்(ர்)

நெல்லை▬பாளை▬வஉசி திடல் அருகே டீக்கடையில்.
#சல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த இளைஞனின் சாதியை கண்டுபிடிக்க ,'உங்க ஊரு பஞ்சாயத்து தலைவரை தெரியுமா,அவருக்கு நீங்க என்ன உறவு' போன்ற வழக்கமான கேள்விகளுக்கு கோபப்படாமல் மழுப்பலாய் பதிலளித்த இளைஞனிடம் கடைசியில் நேரடியாகவே
''தம்பி நீங்க என்ன ஆளுங்கப்பா"
என பவுன்சராய் கேள்வியை வீசியது பெருசு.
"நாங்க 'உறவர்' (உறவுக்காரன் என அர்த்தமாமாம்) ன்னு சொல்லிக்குவோம். ஒங்கள மாதிரி பண்டைய காலத்து ஆளுங்க எங்கள 'உறவன்' ன்னு சொல்லுவாங்க" என போராளி சிக்சர் பதிலடித்தான்.
'மறவன்' ன்னு இருக்கு 'குறவன்' ன்னு இருக்கு. இந்த 'உறவன்' புதுசால்ல இருக்கு . இது, 'நம்ம சாதியை விட உசந்த சாதியா இல்ல தாழ்ந்த சாதியா' என வடிவேலு மாதிரி தனக்கு தானே சொல்லிக் கொண்டு குழப்பத்தில் நகர்ந்தது பெருசு. இதே கருத்தில் வந்துள்ள குறும் படம் (Published on Jun 6, 2018)